மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 16- ஆம் ஞாயிறு (21 ஜூலை 2024 )
வாசகங்கள்: எரே 23:1-6 -15 எபேசி 2:13-18 சங் 23 மாற்கு 6: 30-34
தியானிக்க : “நீங்கள் பாலைநிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று
சற்று ஓய்வெடுங்கள்” - மாற்கு 6: 31
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
இறை இயேசுவில் மிகவும்
பிரியமான சகோதர சகோதரிகளே,
ஆண்டின் பொதுக்காலம் 16-ஆம் ஞாயிற்றுக்கிழமையான
இன்று, கடவுள் நமக்கு அளித்த
வாக்கை நல்லாயன் இயேசுவின் வழியாக நிறைவேற்றியதை குறித்து தியானிக்க அழைப்பு விடுக்கிறது.
ஆண்டவர்தாமே தம் மக்களுக்கு நல்ல மேய்ப்பனாக இருக்கின்றார். எனவே, ஆட்சியாளர்கள் (ஆயர்கள்) தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை (மக்களை) நல்வழியில் நடத்தவும், அவர்களுக்கு நல்வழி வழிகாட்டவும் தவறியதற்க்காக மேய்ப்பர்களை இறைவன் கண்டிப்பதை இன்றைய வாசகங்களில் நாம் காண்கின்றோம்.
மேலும் இன்றைய நற்செய்தியானது நாம் இறைவனில் இளைப்பாற
நமக்கு அழைப்பு விடுக்கின்றது.
முதல் வாசகம்: இன்றைய முதல் வாசகத்தில்
இறைவாக்கினர் எரேமியா நல்ல ஆயனுக்குரிய பண்புகளை தமது நூலில் எடுத்துக் கூறுவது மட்டும்
அல்லாமல், எப்படிப்பட்ட ஆயராக
இருக்கக் கூடாது என்பதையும் கூறுகிறார். இஸ்ரயேல் மக்களிடம் இருந்த தலைவர்கள் நல்ல
ஆயருக்குரிய பண்புகளை பெறவில்லை என்பதை தமது நூலில் சுட்டிக் காட்டுகிறார் (எரே 22-22). பழைய ஏற்பாட்டில் ஆயர்கள், அதாவது, தலைவர்களைப்பற்றிய உவமை, பொதுவாகவே இஸ்ரயேல்
மக்களிடத்தில் காணப்பட்டது. மேலும் இஸ்ரயேல் மக்களை ஆட்சி செய்த அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள்
பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் ஆயர்களாக சித்தரிக்கப்பட்டிருப்பதை நாம் பார்க்கின்றோம்
(எசேக்கியேல்: 34, திருப்பாடல் 23,
திருப்பாடல்கள் 95:7, 100:3, ஏசாயா 40:10-11).
இறைவாக்கினர் எரேமியா புத்தகம் : இறைவாக்கினர் எரேமியா புத்தகம், பழைய ஏற்பாட்டில் உள்ள
ஒரு நீண்ட புத்தகம். இறைவாக்கினர் எரேமியா தமது துன்பங்கள், துயரங்களை பற்றியே அதிகம் பேசியதால் “துயரத்தின் , இறைவாக்கினர்” என அழைக்கப்படுகிறார். எரேமியா என்றால்
“கடவுள் கட்டுகிறார்” என்பது பொருள். எரேமியா இறைவாக்கினர் தமது வாழ்நாளில்
மூன்று அரசர்களின் ஆட்சியில் வாழ்ந்தவர் (ஜோசியா, யோயாக்கின் மற்றும் சதேக்கியா). இறைவாக்கினர் எரேமியா இஸ்ரயேல்
மக்கள் வாழ்வில் முக்கிய பங்கு வகித்தவர். இஸ்ரயேல் மக்களின் துன்பத்ததை கண்டதால் மக்களுக்கு
நம்பிக்கை, அன்பு, எதிர்நோக்கு போன்ற குனநலன்களை பற்றி அதிகம் பேசுகிறார்.
இஸ்ரயேல் தலைவர்கள் சிறப்பாக மக்களை வழிநடத்தாமல் இருந்ததாலும், கடவுளின் மந்தையை சிதறடிக்கும் தவறான தலைவர்களாக
செயல்பட்டதாலும் கடவுளின் கண்டனத்ததை தெரிவிக்கிறார் இறைவாக்கினர் (எரேமியா:23:1-2). தவறான ஆயர்களால் சிதறடிக்கப்பட்ட
ஆடுகளை இறைவனே ஒன்று சேர்ப்பார் எனவும் கூறுகின்றார் (எரேமியா:23:2-3). மேலும், கடவுளே அவர்களுக்கு நல்ல ஆயனை தருவார் எனவும் கூறுகிறார். வரவிருக்கும்
மெசியாவே அந்த நல்ல ஆயர் எனவும் முன்மொழிகிறார் இறைவாக்கினர் எரேமியா (எரே 23:56).
இந்த புதிய ஆயரின் கீழ் மந்தைகள் வழி நடத்தப்படும்
எனவும் ஆட்டு மந்தைகளில் ஒன்றும் குறைவு படாது எனவும் கூறுகிறார்.
இரண்டாம் வாசகம்: இன்றைய
இரண்டாம் வாசகத்தில் திருத்தூதர் பவுல் கடவுளின் அமைதி, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கும்
மற்றும் சிதறுண்ட மக்களுக்கும் வழங்கப்படும் எனவும், சிதறுண்ட மக்களை ஒன்று சேர்ப்பார் எனவும் கூறுகிறார் (எபேசியர் 2:14-18). சிதறுண்ட மக்களை இயேசு தமது சிலுவை தியாகத்தால் ஒன்று சேர்த்தார்
எனவும் கூறுகின்றார். தூய பவுல் கிரேக்க-உரோமானியரிடம் விளங்கிய அமைதியை பற்றி கூறி
அதைவிட வல்லமை மிக்க அமைதியை இறைவன் அருளுவார் எனக் கூறுகிறார். அமைதி என்பது போரை
மட்டும் தவிர்ப்பது அல்ல (எபேசியர்: 2:11-13), மாறாக கடவுள் தரும் அமைதி என்பது அவரை அணுகி அண்டி வரும் அனைவர்க்கும்
உடல், உள்ள அமைதி கிடைக்கும் என
கூறுகிறார் தூய பவுல். மேலும் அமைதி மீட்பின் அடையாளமாக மாற்றப்படும் எனவும் கூறுகிறார். யூத
மக்கள் இடையேயும், புறக்கணிக்கப்பட்ட
மக்களிடையேயும் இந்த அமைதி அடையாளத்தை கடவுள் அளிப்பார்
என கூறுகிறார். இது கடவுள் சிலுவை மரத்தில் செய்த தியாகத்தின் விளைவு எனவும் தூய பவுல் கூறுகிறார் (காண்க ஏசா 57:19).
நற்செய்தி வாசகம்: இன்றைய நற்செய்தி வாசகத்தில் பல இடங்களுக்குச் சென்று பல புதுமைகளையும்,
இறைப்பணியையும் ஆற்றி
மிகவும் சோர்வுடன் வந்த திருத்தூதர்களை கண்டு அவர்களுக்கு ஓய்வு அவசியம் என்பதை உணர்ந்து
இயேசு அவர்களுக்கு ஓய்வு அளிக்க மறுக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால், மக்கள் அவர்களை விடாது பின் தொடர்ந்து மறுக்கரைக்கும் சென்று அடைகின்றனர். பலதூரம் பயணித்து
மன அமைதி மற்றும் உடல் அமைதி அடைய வந்த மக்கள் மீது இயேசு பரிவு கொள்கிறார். கடந்த வார நற்செய்தி வாசகத்தில், இயேசு “அவர்களை” இருவர் இருவராக அனுப்பினார் என்று வாசித்தோம். இந்த “அவர்கள்” யார்
என்பதை இயேசு இன்றைய நற்செய்தியில் தெள்ளத் தெளிவாக “திருத்தூதர்கள்” என்பதை சுட்டிக்
காட்டுகிறார். இறை பணிக்காக சென்றவர்கள் தாங்கள் செய்த
அனைத்தையும் இயேசுவிடம் வந்து கூறுகின்றனர் (மாற்கு 6:30). கலைப்புடன் வந்த அவர்களை பாராட்டாமல் அவர்கள் சோர்ந்து இருப்பதை
கண்டு ஓய்வெடுக்க அவர்களுக்கு அக்கரைக்கு செல்வோம் என்று கூறுகிறார் (மாற்கு 6-30).
இயேசு திருத்தூதர்களின் உடல், உள்ள நலனில் அக்கறை
கொண்டு ஓய்வுக்கு தனிமையான இடத்திற்கு அழைத்து செல்கிறார். ஆனால் இயேசு மறுகரை அடைந்தவுடன்
மக்கள் கூட்டத்தை பார்த்து அவர்கள் ஆயர் எல்லா ஆடுகள் போல் இருப்பதை கண்டு பரிவு கொள்கிறார்
(மாற்கு 6-34). இந்த இயேசுவின் ஆயர்
பண்பு மக்களின் நலனில் அக்கறை கொண்டு மக்களை இன்பத்திலும்
துன்பத்திலும் பேணிக்காக்கும் குண நலனாக இருந்திருக்கிறது. பழைய ஏற்பாட்டில் மக்கள்
தவறி பாவ வழியில் நடந்தனர். ஆனால், இங்கு இயேசு அந்த தவறான வழிகளை சரி செய்து திருத்தூதர்களுக்கு
நல்ல ஆயனின் முன்மாதிரியை தமது ஆயருக்குரிய கரிசனையோடு எடுத்துக் காட்டுகிறார். மோசேயின் காலத்தில் ஆயின் இல்லா ஆடுகள் போல் இருந்த இஸ்ரயேல்
மக்களுக்கு இறைவன் யோசுவாவை அளித்தது போல் இங்கு கடவுள் இயேசுவை தனது மந்தைகளை வழிநடத்த அனுப்புகிறார் (எண் 27:16-17).
, இயேசுவின் நல்ல ஆயனின் உவமை
இறைவன் மக்கள் மீது கொண்ட பரிவுளத்தை எடுத்துக்காட்டுகிறது (யோவான் 10:14-15)
‘ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை, பசும்பொன் வெளி மீது என்னை இளைப்பாற செய்வார், அமைதியான நீர் நிலைக்கு என்னை அழைத்துச் செல்வார்’ என்ற திருப்பாடலுக்கு ஏற்ப, ஆயராம் இயேசு ஆயனின்றி இருக்கும் மக்களுக்கு அமைதி அருள்பவராக புதிய
ஏற்பாட்டில் காணப்படுகிறார். ஆயராம் இயேசு மக்களுக்கு அன்பும், அமைதியும் தமது பிறப்பிலும், உயிர்ப்பிலும் மக்களுக்கு
வழங்கியதை இன்று கலிலேயே கடல் ஓரம் புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கிறார். இயேசு அளிக்கும்
அமைதி உடல், உள்ள அமைதியும்,
ஆயனுக்குரிய நல்ல மந்தைகளை பேணிக்காக்கும் அமைதியாகவும்
அமைகின்றது.
நாம் ஆயராம் இயேசுவை பின்பற்றி ஆடுகளுக்கு நல்லாயனாக
இருக்கிறோமா? பிறரின் உடல்,
உள்ள நலனின் அக்கறை கொண்டு அவர்களை பேணிக்காப்பதிலும்
அவர்களுக்கு தேவையான அமைதியை அருள்வதிலும் நாம் எவ்வாறு பங்கு வகிக்கிறோம்?
சிந்திப்போம்!!!! செயல்படுவோம்!!!