மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு (28 ஜூலை 2024 )-அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 17- ஆம் ஞாயிறு (28 ஜூலை 2024 )
வாசகங்கள்: 2 அரசர் 4:
42-44 திருப்பாடல் 145 எபேசி 4:1-6 யோவான் 6:1-15
தியானிக்க : இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார் - யோவான் 6: 11
ஆண்டின் பொதுக்காலம் 17-ஆம் ஞாயிற்றுக்கிழமையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். இன்றைய வாசகங்கள் (முதல் வாசகம் மற்றும் நற்செய்தி வாசகம்) இறைமகன் இயேசு அப்பங்களை பலுகச்செய்யும் அரும் அடையாளத்தைப் பற்றி சிந்திக்க நமக்கு அழைப்பு விடுக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில், புனித மாற்கு எழுதிய நற்செய்தி ஆறாம் அதிகாரத்திலிருந்து தியானித்துக்கொண்டு வந்தோம். இந்த வாரம் முதல் வருகின்ற ஐந்து வாரங்களுக்கு, நாம் யோவான் நற்செய்தி ஆறாம் அதிகாரத்திலிருந்து வாசிக்க இருக்கின்றோம். இயேசு செய்த இந்த அரும் அடையாளம், அவரை “வாழ்வு தரும் உணவாக” எடுத்துக் காட்டுவதற்கு காரணமாக அமைகின்றது. இன்று அப்பங்களைப் பலுகச்செய்த இறைமகன் இயேசு வருகின்ற வாரங்களில் (யோவான் நற்செய்தி) தம்மை வாழ்வு தரும் உணவாக எடுத்து காட்டுகின்றார்.
முதல் வாசகம்: இன்றைய முதல் வாசகத்தில் (2 அரசர்கள் 4:42-44), இறைவாக்கினர் எலிசா கடவுளின் வல்லமையால் மக்களுக்கு உணவளிக்கின்றார். பழைய ஏற்பாட்டில் உள்ள இறைவாக்கினர் எலிசாவின் உணவளிக்கும் நிகழ்வு, இன்றைய நற்செய்தியில் இறைமகன் இயேசுவின் உணவளிக்கும் புதுமை நிகழ்வுடன் ஒத்துப்போகின்றது. இறைவாக்கினர் எலிசா தமக்கு வழங்கப்பட்ட 20 அப்பங்களை கொண்டு 100 பேருக்கு உணவு அளிக்கின்றார். உணவு அளித்தப் பின்பு எலிசா கூறியது போல, யோவான் நற்செய்தியில் மீதம் உள்ள அப்பங்களை சேர்த்து வைக்க கட்டளையிடுகிறார் இயேசு (யோவான் 6:12-13). இரண்டு வாசகங்களுக்கிடையே ஒற்றுமை இருந்தாலும், அவற்றை வேறுபடுத்தி காட்டுவது எதுவென்றால், இறைவாக்கினர் எலிசா இறைவன் பெயரால் அப்பங்களை பகிரும் அரும் அடையாளம் செய்கிறார். ஆனால் நற்செய்தியில் இயேசு தமது இறை வல்லமையால் அப்பங்களை பலுகச் செய்கின்றார். அப்பங்கள் பலுகும் நிகழ்வின் மூலம் இறைவன் நமக்கு விடுக்கும் அழைப்பு, கடவுள் பெயரால் எந்தச்செயலை செய்தாலும் நமது மனித சக்திக்கு அப்பாற்பட்டு அதிகமாகவே கொடுக்கப்படும் என்பதை எடுத்துக்கூறுகின்றது.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் (யோவான் 6:1-15)
வெளிப்படையாக செய்த அப்பங்கள் பலுகிப்பெருகும் புதுமையை தொடர்ந்து,தானே வாழ்வுதரும் உணவு என்று மக்களுக்கும் தம் சீடர்களுக்கும் எடுத்துக் கூற இந்த புதுமையைச் செய்கின்றார் . ஆண்டவர் இயேசு தான் ‘வாழ்வு தரும் உணவாக’ ஏன் நம்மை வெளிப்படுத்த வேண்டும்? அதன் பின்புலம் என்ன?
யோவான் நற்செய்தியாளர், இயேசுவை “நானே வாழ்வு தரும் உணவு” என்று வெளிப்படுத்துகிற பகுதி (யோவான் 6: 1-15), யூதர்களின் விழாக்களின் நடுவே அமைக்கப்பட்டிருப்பதாக காண்பிக்கின்றார் (காண்க: யோவான் நற்செய்தி அதிகாரங்கள் 5-10). யோவான் நற்செய்தியில் இயேசு பாஸ்கா விழாவை எருசலேமில் கொண்டாடுவதாக வெளிப்படுத்தவில்லை; மாறாக, கலிலேயா கடலின் மறுபக்கம் உள்ள திபேறியா கடற்கரை பகுதியில் நடத்துவதாக காட்டுகிறார் (யோவான் 6:14). அதனை தொடர்ந்து, இயேசு கூடாரங்களின் விழாவையும் கொண்டாடுகின்றார் (யோவான் 7:2). இறுதியாக எருசலேம் ஆலய நேர்ந்தளிப்பு விழாவினையும்கொண்டாடுகின்றார் (யோவான் 10:27).
மேலும் இன்றைய நற்செய்தியில்தூய யோவான், இயேசுவை பெருந்திரளான மக்கள் கூட்டம் பின் தொடர்கின்றது என்று குறிப்பிடுகின்றார் புனித யோவான் (காண்க:மத்தேயு 14:13-21; மாற்கு 6:32-44;
லூக்கா 9:10-17).
இயேசுவை மக்கள் பின்தொடர்ந்தது அவர்மீது மக்கள் வைத்த நம்பிக்கையை எடுத்துக் கூறுகின்றது. பெருந்திரளான மக்கள் பின் தொடர்ந்ததால், மனம் உவந்து ஆயனில்லா ஆடுகளைப் போன்ற மக்கள் மீது பரிவு கொண்டு அப்பங்களை பலுகச்செய்கின்றார்.
இயேசுஅப்பங்களை பலுகச்செய்த புதுமையை விவிலியத்தில் இரண்டு முறை காண்கின்றோம். இரண்டு நிகழ்வுகளில், முதலாவது புதுமையை, யூத எல்லைக்குட்பட்ட பெத்சைதாவிலும் (லூக்கா 9:10; மாற்கு 6:45), இரண்டாவது புதுமையை யூதர்களின் பகுதிக்கு அப்பாற்பட்ட இடத்திலும் செய்கிறார் (மாற்கு 6:31).
இயேசுவின் அப்பங்கள் பலுகச்செய்யும் புதுமையை தொடர்ந்து, நற்செய்தியாளர் லூக்காவை தவிர அனைத்து நற்செய்தியாளர்களும் இயேசு கடல் மீது நடந்த நிகழ்வை பின்பு பதிவிடுகின்றனர்.
இப்புதுமையில், முதல் புதுமை ஐந்து அப்பங்களும் மற்றும் இரண்டு மீன்களும் கொண்டு செய்து காட்டுகின்றார். இரண்டாவது, நிகழ்வில் ஏழு அப்பங்களும் மற்றும் சில மீன்களும் கொண்டு புதுமை செய்கின்றார் (மத்தேயு 15:32-39) மற்றும் (மாற்கு 8:1-9).
இன்று நாம் வாசிக்க கேட்ட நற்செய்திக்கும், பழைய ஏற்பாட்டிற்கும் உள்ள பின்புலம் என்ன? பழைய ஏற்பாட்டில் அப்பங்கள் பற்றிய வாசகத்தை முதன் முதலில் விடுதலைப் பயணம் 14-ஆம் அதிகாரத்தில் காண்கிறோம். பாலைநிலத்தில் கடவுள் கொடுத்த மன்னாவிற்கும், இன்று இயேசு பாலைநிலத்தில் அப்பங்களைப்பலுகி பெருகச்செய்து தம்மை இஸ்ரயேல் மக்கள் எதிர்பார்த்திருந்த இறைவாக்கினராக வெளிப்படுத்தியது பல நிலைகளில் ஒத்துபோகின்றது.
மோயீசனும் ஆண்டவர் இயேசுவும் : பழைய ஏற்பாட்டில் மோசேயின் பரிந்துரையால் மன்னாவை (அப்பங்களை) பொழிந்த யாவே இறைவனை ப்போல, இன்றைய புதுமையில் இயேசு புதிய மோசேவாக செயல்பட்டு அப்பங்களை பலுக செய்கின்றார். இயேசு செய்த புதுமை அவரே மெசியா என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது. புழைய ஏற்பாட்டில் மோசே கடவுளை கேட்டது போல இயேசுவும் பிலிப்பிடம் இவர்களுக்கு உணவு எங்கிருந்து வழங்குவது என்று கேட்கிறார். புழைய ஏற்பாட்டில் மோசே இஸ்ரயேல் மக்களை எதிர்கொண்டது போல இயேசுவும் சீடர்களும் அவர்களை பின்தொடர்ந்த இஸ்ரயேல் மக்களை எதிர்கொள்கின்றனர். இயேசு செய்த புதுமைக்கும் மோசேயின் பரிந்துரைக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் இயேசு தான் செய்த புதுமையை தந்தையின் உதவியாலும் தமது வல்லமையாலும் செய்து காட்டி மோசேயை விட தான் பெரியவர் என்பதை நிருபித்து காண்பிக்கின்றார்.
இயேசு தமது புதுமையினால் இரண்டு முக்கிய செய்திகளை வெளிப்படுத்துகிறார் :
முதலாவது, இயேசு தான் செய்த புதுமையால் தம்மீது நம்பிக்கை கொள்ள அழைப்பு விடுக்கின்றார். இயேசு மீது சீடர்கள் மீண்டும் நம்பிக்கை கொள்ள ஏற்படுத்தப்பட்ட வாய்ப்பாக இந்த அப்பங்கள் பழகும் நிகழ்வு அமைந்துள்ளது. இயேசுவை பின்பற்றிய மக்களைவிட, சீடர்கள் தான் இயேசுவின் புதுமையைக் காண ஆவலாக காத்திருந்தனர் என்று கூறமுடியும். இப்படிப்பட்ட புதுமை நடக்கவும் சீடர்கள் இயேசுவுக்கு உதவி புரிகின்றனர்.
இரண்டாவது, இயேசு தான் செய்த புதுமையால் தந்தையாம் கடவுள் மீது ஆழ்ந்த விசுவாசம் கொள்ள அழைப்பு விடுக்கின்றார். தேவையில் உள்ள போது கடவுள் கொடுப்பார் என்று சீடர்கள் உணர்ந்து கொள்ள மற்றொரு வாய்ப்பையும் இயேசு கிறிஸ்து இங்கே தம் சீடர்களுக்கு வழங்குகின்றார். இறைவன் பெயரால் பிறருக்காக எதைச்செய்தாலும் தமது தகுதிக்கு மீறி கடவுள் அளிப்பார் என்பதை விளக்குகின்றார்.
நற்கருணை அருளடையாளம் : இயேசு ஐயாயிரம்பேருக்கு உணவளித்த இந்த புதுமை நற்கருணை அருளடையாளத்தின் முன்அடையாளமாக விளங்குகின்றது. நற்கருணையை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இன்றைய புதுமை பல படிப்பினைகளை கற்றுத்தருகின்றது : முதலாவது, நற்கருணை நன்றியின் அடையாளம்: “இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார் ” (யோவான் 6:11). இந்த நிகழ்வின் வழியாக இயேசு நற்கருணையின் முன்மாதிரியை செய்து காட்டுகின்றார் (மாற்கு 6:4; மத்தேயு 14:19 மற்றும் லூக்கா 9:16). இவ்வாறு கடவுளுக்கு நன்றி கூறும் செயலை, இயேசு தமது இறுதி இரவு உணவிலும் செய்து காட்டுகின்றார். உயிர்த்தெழுந்த பின்பும் எம்மாவுஸ் சீடர்களிடமும் இதே நிகழ்வினை செய்து காட்டுகின்றார். இதன் வழியே இயேசு அப்பவும் இரசமும் மட்டும் கடவுளுக்கு செலுத்தும் நன்றி அல்ல மாறாக திருப்பலியில் கொண்டாடும் நற்கருணையும் நன்றியின் அடையாளம் என்று காட்டுகிறார். இந்த நன்றியின் நினைவையே தமது உயிர்ப்பிற்கு பின்பு சீடர்களையும் கொண்டாட இயேசு பணிக்கிறார். நற்கருணை ஓர் நன்றியின் அடையாளம் மற்றும் இயேசுவின் இறப்பை நினைவுக்கூறும் ஒரு அன்பின் அடையாளம்.
இரண்டாவதாக, நற்கருணை திரு அவையின் வாழ்வு:
இன்று இயேசு நடத்திய புதுமையானது திரு அவையில் நடத்தப்படும் திருப்பலியின் முன்னோட்டமாக இறைமகன் இயேசு நடத்திக் காட்டுகின்றார். தகுதியற்ற நம்மை அழைத்து தகுதிப்படுத்தி திருப்பலியில் கடவுளோடு இணைந்து கொண்டாட நமக்கு அழைப்பு விடுக்கின்றார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் தூய பவுலடியார் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் மக்கள் அனைவரையும் சீடத்துவத்தோடு வாழ அழைப்பு விடுக்கின்றார். கடவுளால் அழைக்கப்பட்ட நாம் நம்மை தகுதி ஆக்கி நம்மையே கடவுளுக்கு உரிய நல்ல மனிதர்களாக மாற்றி அன்பு, இரக்கம், பொறுமை போன்ற பண்புகளைக் கொண்டு கடவுளுக்குரிய ஆவியையும் அமைதியையும் பெற்றுக்கொள்ள அழைப்பு விடுக்கின்றார் (எபேசியர் 4:1-3). திருப்பலியில் பங்கு பெறுவதின் வழியாக கடவுள் நமக்கு வெளிப்படுத்தும் உண்மை எதுவென்றால், இறைவன் ஒருவரே நமது உள்ள பசியையும் உடல் பசியையும் தீர்க்ககூடியவர் என்பது விளங்குகின்றது.
இந்த புதுமையின் வழியே இறைவன் தமது நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன?
முதலாவது, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் சிறுவனின் உதவியால் தமது இறை வல்லமைக்காக பயன்படுத்திக் கொள்ளும் கடவுள் ,பல்வேறு குறைபாடுகளுடன் .வாழும் நம்மையும் தமது இறைப்பணிக்காகவும் அவரது அன்பையும் இரக்கத்தையும் பிறர் வாழ்வில் வெளிப்படுத்தும் கருவிகளாக பயன்படுத்துகின்றார் என்ற ஆழ்ந்த விசுவாசம் நமக்கு தேவை.
இரண்டாவது, உணவு அருந்தும் முன்பு கடவுளுக்கு நன்றி செலுத்தி மக்களுக்கு அளித்த இயேசு, இன்று நம்மையும் நாம் உண்ணும் உணவுக்கு முன்பு கடவுளுக்கும் அதற்காக உழைத்த நபர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும் என்பதை தமது செயல் வழியாக குறிப்பிடுகின்றார் (யோவான் 6:9).
மூன்றாவதாக, இயேசு மக்களுக்கு உணவளித்த பின்பு மீதமுள்ள அப்பங்களை 12 கூடைகளில் எடுத்து வைக்க சீடர்களுக்கு பணிக்கின்றார். இதன் மூலம் அவர் நமக்கு உணவை வீணாக்காமல் இருக்கும் ஒரு படிப்பினையை கற்றுத் தருகின்றார்.
நான்காவதாக, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் மற்றும் ஏழு அப்பங்களையும் சில மீன்களையும் பகிர்ந்து அளித்து (மத்தேயு 15:32-39 மாற்கு 8:1-9) மக்களின் பசியை போக்கி நிறை வாழ்வு அளிப்பவராக தம்மை வெளிப்படுத்திய இறைவன், இன்று நம்மையும் திருப்பலியின் வழியாக கடவுளின் வார்த்தைகளை மக்களுக்கு வழங்கி அவர்களது ஆன்மீக தாகத்தை தணித்துக்கொண்டு வாழ உதவுமாறு நமக்கு அழைப்பு விடுக்கின்றார்.
நம் சிந்தனைக்கு : நான் கடவுளை விண்ணகத்தில் இருந்து இறங்கி வந்த உணவாகவும், எனது ஆன்மீக தாகத்தை தணிப்பவராகவும் காண்கிறேனா?
எனக்காக அனைத்தையும் செய்யும் இறைவன் மீது நான் நம்பிக்கை கொள்கிறேனா?
என்னுடைய வாழ்வில் இறை வல்லமை செயல்பட நான் என்னையே அனுமதிக்கின்றேனா?
நமது ஆன்மீக தாகத்தை இறைவன் தமது வல்லமையால் முழுமையாக நிறைவேற்றுவார் என்பதை நம்புவோம்.
அருட்பணி பேட்ரிக் மத்தியாஸ் ச .ச .
மிகவும் அருமையான நமது ஆண்டவர் பிறரை எப்படி நேசிக்க வேண்டும் எப்படி உள்வாங்கி அவருக்குள் செல்ல வேண்டும் என்பதை நமது மறையுறை வழியாகவும் விவிலியும் வழியாகவும் அதனை நமக்கு தந்தை அவர்களுக்கு என்னுடைய ஜெபங்களும் நன்றிகளும்
ReplyDeleteஉங்களுடைய அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. ஆண்டவருடைய உயிர்தரும் வார்த்தைகள் நம் ஆன்மிக உணவாகட்டும். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
ReplyDelete