மறையுரை - ஆண்டின் பொதுக்காலம் 18- ஆம் ஞாயிறு (4 ஆகஸ்ட் 2024 )-அருள் பணி பேட்ரிக் மத்தியாஸ் ச .ச

0

 



மறையுரை  - ஆண்டின் பொதுக்காலம் 18- ஆம் ஞாயிறு (4 ஆகஸ்ட் 2024 )

நானே வாழ்வு தரும் உயிருள்ள உணவு

வாசகங்கள்:  வி. 16:2-4.12-15   சங் 77  எபேசி  4:17.20-24     யோவான்   6:24-35

தியானிக்க :வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது -யோவான் 6:35

    அருள் பணி பேட்ரிக் மத்தியாஸ் . .                                                                                                                                                                     

இறை இயேசுவில் அன்புமிக்க சகோதர சகோதரிகளே,

ஆண்டின் பொதுக்காலம் 18-ஆம் ஞாயிறை நாம் சிறப்பித்துக் கொண்டிருக்கிறோம். எண்ணில்லா கருணையால் பாலைநிலத்தில் பொழியப்பட்ட “மன்னா” அப்பங்களால் அல்ல, மாறாக மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட நிலைவாழ்வு தரும் கடவுளின் “உடலாகிய” உணவை குறித்து சிந்திக்க நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு மீது கொண்ட நம்பிக்கையால் உண்ணும்  உணவு விண்ணகவாசலின் நிலை வாழ்வை குறித்துக் காட்டுகிறது.

முதல் வாசகம்

இன்றைய முதல் வாசகத்தில் எகிப்திலிருந்து விடுவிக்கப்பட்டு பாலை நிலத்தில் அலைந்து திரிந்த இஸ்ரயேல் மக்கள் உணவுப் பற்றாக்குறையினாலும், பசியின் கொடுமையினாலும் கடவுளுக்கும், மோசேவுக்கும் எதிராக கூக்குரல் இடுகின்றனர். மாரா பாளையத்தில் “கசப்பு நீரை” குடித்துவிட்டு ஆண்டவருக்கு எதிராக முணுமுணுத்த மக்கள் (வி.ப 15:23-24)இன்றைய வாசகத்தில் உணவுக்காக  எலிம் என்ற இடத்தில் முணுமுணுக்கின்றனர்(வி.ப 16). தங்களை விடுவித்த இறைவனை மறந்துவிட்டு எகிப்தில் வாழ்ந்த நாள்களை பற்றிப் பெருமையாக பேசுகின்றனர். இருப்பினும் கடவுள் அவர்களுக்கு உணவு அளிக்கிறார். உணவு வழங்கியது மட்டுமல்ல அவர்களிடம்  அன்றன்றைக்குத் தேவையானது மட்டும் சேகரிக்க வேண்டும் எனவும், தேவைக்கு மிகுதியாக எதையும் சேகரிக்கக் கூடாது எனவும் கட்டளையிடுகின்றார். ஆனால் மக்கள் அவருக்குக் கீழ்படியவில்லை (வி.ப 16:20. 28). இறைவனே மக்களுக்கு உணவு அளித்ததின் காரணமாக உடன்படிக்கை பேழையில் மன்னாவும் இடம்பெற்றது (வி.ப 16:33-34). மக்கள் மன்னாவை கண்டபொழுது, அவர்கள் கண்ட பொருள்களின் பெயர் தெரியாததால் அதை “மன்னா” என்று அழைத்தனர். “மன்னா” என்றால் “அது என்ன? என்பது பொருள்.

இரண்டாம் வாசகம்

இன்றைய இரண்டாம் வாசகத்தில், தூய பவுல் அடிகளார் எபேசியருக்கு  எழுதிய திருமுகத்தில், கிறிஸ்துவ மக்கள் கிறிஸ்துவிற்குள் கடவுளுக்குரிய மனநிலையோடு வாழ அழைப்பு விடுக்கிறார். ஏனெனில், யூத மக்கள், தங்களது கொள்கைகளை மற்ற மக்களின் வாழ்க்கை நெறியைக் காட்டிலும் உயர்வானது என்று கருதி மற்ற மக்களை கீழ்நோக்கிப் பார்த்தனர். எனவே துய பவுல் கிறிஸ்தவர் அனைவரும் ஒரே உள்ளத்தோடு நல்ல வாழ்க்கை முறையை கொண்டு கடவுளுக்கு உகந்த வாழ்வு வாழ அழைப்பு விடுக்கிறார். கிறிஸ்தவ மக்கள் கடவுளை அறியாதவர் போல் அல்ல மாறாக கடவுளை ஏற்று மனதளவில் அறிந்தவர்கள் போல வாழப் பணிக்கிறார் (எபேசி  4:17). பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு கடவுளுக்குரிய புதிய வாழ்வை வாழ கிறிஸ்துவர்கள் அழைக்கப்படுவதாக தூய பவுலடியார் கூறுகிறார். கடவுளை பின்பற்ற விரும்புவோர், தீயோனுக்குரிய எண்ணங்களை களைந்துவிட்டு ஆவிக்குரிய எண்ணங்களை தங்களுக்குள் புதுப்பித்துக் கொள்ள அழைப்பு விடுகின்றார்.

நற்செய்தி வாசகம்

கடந்த ஞாயிறு அன்று அப்பங்களை பலுகச் செய்த பின் மக்களால் அரசராக கொண்டு செல்லபட்ட போது அதை நிராகரித்த இயேசு மலை மீது ஏறி தனிமையை நோக்கி சென்றார் என்று பார்த்தோம் (யோவான்   6:15). ஆனால், இன்றைய நற்செய்தியில், அப்பங்கள்களை பகிர்ந்து அளித்ததில் வயிறார உண்ட மக்கள் தங்கள் மனங்களை வெறுமையாக்கிக் கொண்டதை இயேசு உணர்கிறார். இன்றைய நற்செய்தியில், இயேசு கப்பர்நாகுமுக்கு செல்கிறார் என்பதை நற்செய்தியாளர் யோவான் கூறுகிறார். ஆனால், தூய மாற்கு மற்றும் மத்தேயு நற்செய்தியாளர்கள் இயேசு கெனசரேத் பகுதிக்கு செல்வதாக குறிப்பிடுகின்றனர். கெனசரேத் என்பது கப்பர்நாகுமுக்கும், திபேரியா பகுதிக்கும் இடைப்பட்டது. இயேசு படகில் ஏறி மறுகரைக்குச் செல்கிறார். மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்கிறது. தம்மை பின்தொடரும் மக்கள் தான் செய்த புதுமையால் மட்டுமே தம்மை பின் தொடர்கின்றனர் என்பதை புரிந்துகொண்டு இயேசு அவர்களிடம் அழியும் உணவுக்காக அல்ல மாறாக அழியாத நிலைவாழ்வு தரும் உணவுக்காக உழையுங்கள் என்கிறார் (யோவான் 6:27. காண்க: இசையாஸ் 55:2). கடவுள் இயேசுவை உலக மீட்பிற்காக அனுப்பினார். ஆனால் மக்கள் அதை உணராமல் உணவுக்காக இயேசுவை பின்பற்றுகின்றனர். இயேசுவை தொடர்வது மக்கள் மனம் நிறைவு அடைய அல்ல அவர்கள் வயிறு நிறைய என்பதை நற்செய்தியாளர் சுட்டிக்காட்டுகின்றார்.

இறைமகன் தம்மிடம் உள்ள கடவுள் தன்மையை வெளிப்படுத்துகிறார்

கடவுளுக்கு உரிய செயல்கள் அனைத்தும் நம்பிக்கையில் ஆழப்படுத்தப்படுகிறது என இயேசு வெளிப்படுத்துகிறார். நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் இறைமகன் இயேசுவிடம் நம்பிக்கைக் கொள்ள பயன்படுத்தப் படவேண்டும் என்ற உண்மையை இறைமகன் மக்களுக்கு வெளிப்படுத்துகிறார்(யோவான் 6:29). கடவுளை ஏற்றுக்கொள்வதும், தம்மீது நம்பிக்கை கொள்வதும் கடவுளுக்குரிய செயலே என்கிறார்.  ஆனால் கடந்த வாரத்தில் மக்களுக்கு உணவளித்தப் புதுமையை தொடர்ந்து மக்கள் அவரைப் பின்தொடர்ந்து செல்கின்றனர். ஏனெனில் மக்கள் இயேசுவை நோயிலிருந்து குணப்படுத்துபவராகவும், உணவு அளிப்பவராகவும் மட்டுமே பார்பவர்களாக தங்களது பார்வையை சுருக்கிக் கொண்டனர். இது  மக்களின் கடின  உள்ளத்தைக் காட்டுகிறது. ஆனால் இயேசு இஸ்ரயேல் மக்கள் பாலை நிலத்தில் மன்னாவை உண்டு  உயிர் வாழ்ந்தது போல, நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்லும் உணவின் அவசியத்தை உணர்த்தி பேசிக்கொண்டிருந்தார்(யோவான் 6:33).

இயேசுவிடம் நம்பிக்கை கொள்ள அழைப்பு:

எங்களது மூதாதையர்கள் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனர் என்று வாதாடி மக்கள் இயேசுவின் புதுமை செயலை நியாயப்படுத்திப் பேசுவாதாக நினைத்து அதோடு மோசேதான் அவர்களுக்கு மன்னாவை அளித்தார் எனவும் கூறுகின்றனர். யூதர்களுக்கு மோசே ஒரு மாமனிதராகவும், கடவுளின் தூதுவராகவும் தெரிந்தார். மோசே கடவுளுக்கும் மக்களுக்கும் இடையே கருவியாகச் செயல்பட்டார் என கூறியவர்களுக்கு இயேசு அவர்களின் தவறான கொள்கைகளை எடுத்துக்காட்டி மன்னா அளித்தது மோசே அல்ல மாறாக தம்முடைய விண்ணக தந்தையே எனக் கூறுகிறார் (யோவான் 6:32; காண்க: வி.ப 16:4). மன்னா உண்மையான உணவு அல்ல எனவும் மானிட மகனே! உண்மையான வாழ்வு தரும் உணவு என்பதை குறிப்பிடுகிறார்.  மானிட மகனை உணவாக உண்பவர் என்றுமே நிலை வாழ்வில் வாழ்வார் என்பதையும் அவர் தெள்ளத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறார்.

இயேசுவே கடவுள் தந்த உணவு:

 விண்ணக உணவான மன்னா இஸ்ரயேல் மக்களின்; பசியை போக்கியது. ஆனால் கடவுள் தந்த உணவாகிய இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டுமே மண்ணக மாந்தர் அனைவரின் பசியைப் போக்க கூடியது எனவும் கூறுகிறார். இந்த உண்மையை வெளிப்படுத்திய போது மக்கள் அந்த பசி எடுக்காத உணவைத் தர வேண்டுகின்றனர்(யோவான் 6:34). இதே போல சமாரிய பெண்ணும் தாகமே ஏற்படுத்தாத  நிலைவாழ்வின் தண்ணீரை இயேசுவிடம் கேட்கிறார் (யோவான் 4:15). இயேசு தனது நிலையை உணர்ந்தவராக மக்களுக்கு உணவாகவும் தண்ணீராகவும் தம்மை வெளிப்படுத்துகிறார். யோவான் நற்செய்தியில் இயேசு “நானே” என்ற கூற்றை அதிகம் பயன்படுத்துகிறார். நானே வாழ்வு தரும் உணவு (6:35), நானே ஒளி (8:12), நானே வாயில் (10:7.9), நானே அவர் (18:5) (மற்றும் பழைய ஏற்பாட்டில், இருக்கிறவராக இருக்கின்றவர் நானே” காண்க: வி.ப 16:4),  என தம்மை பல வகைகளில் தனது நிலை இவ்வுலகை சார்ந்தது அல்ல என வெளிப்படுத்த பயன் படுத்துகிறார் ஆண்டவர் இயேசு.

இறைவன் நம்மை ஆழ்ந்த தேடலுக்கு உட்படுத்துகிறார்:

ஆழ்ந்த தேடல் மனித வாழ்வின் அங்கம். மனிதன் தனது வாழ்வை தேடலில் தொடங்கி தேடலில் முடிக்கிறான். இதற்கு சிறந்த உதாரணம் தூய அகஸ்டின். அவர் தமது வாழ்வில் பல தேடல்களைக் கடந்த பின்பு இறைவனை கண்டுகொண்டபோது கூறிய கூற்று “என் இதயம் உன்னை அடையும் வரை இறைவா தணியா தாகம் கொண்டு உள்ளது” என்றார்.  

மனிதர்களாகிய நாம் அனைவரும் மன தேடலை தேடி அலைகிறோம். ஆனால் பலவேளைகளில் நமது உள்ளத்தில் உள்ள இறைவனை விட்டு விட்டு இஸ்ரயேல் மக்களைப் போல அனுதின நிலையற்ற இன்பங்களைத் தேடி அலைகிறோம். மாறாக கடவுள் இஸ்ரயேல் மக்களுக்கு தந்த பசியெடுக்காத உணவைப் போல, தாகம் எடுக்காத தண்ணீரை சமாரிய பெண்ணிற்கு கொடுத்தது போல, நமக்கும் ஆன்மீக உணவும் பானமுமான அப்ப ரசத்தை  வழங்குகிறார். அவர் உலகிற்கு விட்டுச் சென்ற திருஉடல், திருஇரத்தத்தை நமது ஆன்ம உணவாக ஏற்றுக்கொள்வோம்.  நிறைவுள்ளவர்களாக மாறுவோம்


to Download Text - Click Here




Post a Comment

0Comments
Post a Comment (0)