உயிர்ப்பு பெருவிழா ஞாயிறு – 31 மார்ச் 2024
வாசகங்கள்: தி.பணி 10:34a, 37-43 சங் 118:1-2, 16-17, 22-23 கொலோ 3:1-4 யோ 20:1-9.
அருட்பணி. பேட்ரிக் மத்தியாஸ் ச.ச.
……………………………………………………………………………………………………
இறந்த கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால் நாங்கள் பறைசாற்றிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும் (1கொரி 15:14).
இன்று தாயாம் திருச்சபை ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவை பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறது. இது நமது விசுவாச விழா. கொரிந்தியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுலடியார் “கிறிஸ்துவ விசுவாசமும் நம்பிக்கையும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பிலே தான் அடங்கி இருக்கிறது என்று கூறுகின்றார்” (1கொரி 15:14). ஆம் அன்பர்களே, இயேசுவின் உயிர்ப்பு நமக்கு சுட்டிக்காட்டுவது இறப்பிற்கு பின் வாழ்வு உண்டு என்ற நம்பிக்கையும், அந்த நம்பிக்கையின் வெளிப்பாடாக இப்பொழுதே இவ்வுலகிலேயே உயிர்ப்பின் மக்களாக வாழவேண்டும் என்ற வாழ்க்கை பாடங்கள் மட்டுமே.
இன்றைய நற்செய்தி வாசகத்தின் கதாநாயாகிய வருபவர் புனித மதலேன் மரியாள். “வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்கு சென்றார்.” அன்பின் மிகுதியால் இயேசுவை தேடி, நாடி செல்கின்றாள்: கண்டடைகின்றாள். உயிர்ப்பின் மக்களாக வாழ்வதற்கு மதலேன் மரியாள்- சிறந்த எடுத்துக்காட்டு. அப்படியானால் யார் இந்த மதலேன் மரியாள்? இவரைப்பற்றி பார்க்கின்ற பொழுது, லூக் 7:36-50ல் பாவியான ஒரு பெண், என்று குறிப்பிடப்படுகின்றாள். ஆண்டவர் இயேசு இவர் செய்த பல பாவங்கள், அவர் காட்டிய அன்பின் நிமித்தம் அவருக்கு மன்னிக்கப்பட்டன என்று கூறுகின்றார் (லூக்7:47).
மேலும் மாற்கு 16:9-ல் இயேசு மதலேன் மரியாவிடமிருந்து ஏழு பேய்களை ஓட்டினார் என்று வாசிக்கின்றோம். ஆனால் இயேசு பாடுகளின் போது சீடரெல்லாரும் அவரை விட்டு ஓடிய பொழுது மதலேனாள் மாதாவோடு சேர்ந்து சிலுவையின் அடியில் நின்று கொண்டிருப்பதை நாம் காண்கிறோம் (யோ19:25). இந்த அன்பின் காரணமாகவே மதலேன் மரியாவை ஆண்டவர் இயேசு தன் உயிர்ப்பின் முதல் நற்செய்தியாளராக தெரிந்து கொள்கிறார். தாம் உயிர்த்தெழுந்ததை தம்முடைய சீடர்களுக்கு சொல்கின்ற பொறுப்பை இயேசு அவளிடம் ஒப்படைக்கின்றார். இதனாலேயே, மதலேன் மரியாவை முற்காலத்திய திருச்சபையின் தந்தையர்கள் இவரை “அப்போஸ்தலர்களுக்கு அப்போஸ்தலர்” என்றும் “சீடருக்கு சீடர்” என்றும் பெயரிட்டனர்.
மதலேனாளைப் போல, பாவ வாழ்வை விட்டுவிட்டு உயிர்த்த இயேசுவை நாமும் விடாப்பிடியாக பிடித்துக் கொள்ளவேண்டும். அவளைப் போல நம்முடைய வாழ்க்கையில் இயேசுவை தேடுகின்ற பாக்கியத்தை நாம் பெற்றுக் கொள்ளவேண்டும்.
ஆம் அன்பர்களே, உயிர்ப்பு விழாவை கொண்டாடுகின்ற நாம் சாவு என்பது முடிவல்ல, ஆனால் மரணத்திற்கு பிறகு மறுவாழ்வு உண்டு என்பதை மனதில் இருத்தி நம்முடைய வாழ்க்கையிலே, இயேசுவை நாடி, தேடி கண்டடைய வேண்டும். நம்முடைய கிறிஸ்துவ சீடத்துவ வாழ்க்கையினாலேயே இயேசுவின் சாவிற்கும் உயிர்ப்பிற்கும் சான்று பகர நாம் முன்வர வேண்டும். இதற்கு மிகவும் தேவைப்படுவது உயிர்த்த ஆண்டவருடைய உடனிருப்பை நம்முடைய வாழ்க்கை அனுபவங்களிலே கண்டு கொள்வது ஆகும்.
உயிர்த்த ஆண்டவருடைய தொடர் பிரசன்னம் என்றும் நம்மோடு இருக்கின்றது என்ற விசுவாசத்தினாலேயே மகிழ்ச்சியோடு நமது வாழ்க்கை போரட்டங்களில் வெற்றியடைய முன்வரவேண்டும். புனித அகஸ்தினார் கூற்றுக்கு இணங்க “நாம் உயிர்ப்பின் மக்கள் அல்லேலூயா நமது கீதம்” என்ற புனித அகுஸ்தினார் கூற்றுக்கினங்க நாம் விளங்க வேண்டும்.
மேலும் இப்படியொரு புனித வாழ்வு வாழ, தூய பவுலடியார் 2கொரி 5:15-ல் கூறுவதை மனதில் நிறுத்த வேண்டும்: “வாழ்வோர் இனி தங்களுக்கென்று வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்ப்பெற்றெழுந்தவருக்காக வாழவேண்டும்.”
நற்செய்தியானது கிறிஸ்துவின் உயிர்ப்பை விளக்குகிறது என்பதைவிட கிறிஸ்துவின் உயிர்ப்புதான் நற்செய்திக்கே விளக்கமளிக்கிறது என்பதை விசுவசித்து மகிழ்வோடு உயிர்த்த இயேசுவில் வாழ மன உறுதிகொள்வோம்.
உங்கள் அனைவருக்கும் உயிர்த்த ஆண்டவரின் பெருவிழா நல்வாழ்த்துக்கள்!!
அல்லேலூயா!
To Download the Test- Click Here
…………………………………………………………………………………………………….
Comments
Post a Comment